ஆவினின் 3 வகை வே–பானம்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிமுகம் செய்தார்


மேங்கோ, பைன் ஆப்பிள், ஜால்ஜீரா சுவையில் ஆவின் நிறுவனத்தின் 3 வகையான வே–பானத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிமுகம் செய்தார்.இது குறித்து ஆவின் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் இரண்டாம் வெண்மை புரட்சியை முனைப்புடன் செயல்படுத்திவரும் ஆவின் நிறுவனம் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப சென்னை மாநகரில் தற்போது சராசரியாக தினசரி 12.30 லட்சம் லிட்டர் பால், மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான பால் பொருட்களை மாதம் தோறும் விற்பனை செய்து வருகிறது. சென்னை நகரில் நுகர்வோர்களின் தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற பொருட்களை வழங்கி, விற்பனையை உயர்த்தத் திட்டமிட்டு செயலாற்றி வழங்கி வருகின்றது.

அம்பத்தூர் பால் பொருட்கள் பண்ணையில் பனீர் தயாரிக்கும் பொழுது கிடைக்கும் வே-–தண்ணீரை புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தினமும் அருந்தக்கூடிய பானமாக மேங்கோ, பைன் ஆப்பிள், ஜால்ஜீரா, என மூன்று சுவைகளில் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியினால் அறிமுகம் செய்யப்பட்டு, அனைத்து ஆவின் பாலகங்களில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வே-பானத்தில் உயர்தர ஊட்டச் சத்துக்கள் உள்ளது. இதன் விலை 200 மிலி ரூ: 20க்கு அனைத்து ஆவின் பாலங்களிலும் கிடைக்கும்.

மேலும், ஆவின் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளான பால் கொள்முதல், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை, பால் வண்டிகளின் இயக்கம் போன்றவற்றின் மீதான கண்காணிப்பினை உறுதி செய்யும் வகையில் இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணியாற்றி வரும் பொது நிலை அலுவலர்களான துணைப் பொதுமேலாளர்கள் மற்றும் பொதுமேலாளர்களுக்கு ரூபாய்.11.31 லட்சம் செலவில் 28 கையடக்கக் கணினிகளை, அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சட்டப்பேரவையில் 201–8-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளில் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து கையடக்கக்கணினிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியினால் பொது மேலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இறுதியில் ஆவின் பால் தரக்கட்டுப்பாடு மற்றும் பசுந்தீவனம் கையேடுகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். கே. கோபால், ஆவின் நிர்வாக இயக்குநர் சி. காமராஜ், ஆவின் இணை நிர்வாக இயக்குநர் திரு. க. மணிவண்ணன் மற்றும் ஆவின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நுகர்வோர் தங்கள் புகரர் மற்றும் ஆலோசனைகளைத் தொிவிக்க 24 மணி நேரம் நுகர்வோர் நலன் மற்றும் சேவைப் பிரிவு கட்டணமில்லா தொலைபேசி 1800 425 3300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது aavincomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.