‘ஆன்-லைன்’ மூலம் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ்கள் வழங்கும்முறை புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்Police verification services go online


‘ஆன்-லைன்’ மூலம் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்து முதல் சான்றிதழை ஒரு பெண்ணுக்கு வழங்கியபோது எடுத்த படம். அருகில் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால், கூடுதல் கமிஷனர்கள் அருண், மகேஷ்குமார் அகர்வால், தினகரன் ஆகியோர் உள்ளனர்.

 

சென்னை, ஜன.10-

‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பித்து போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

சரிபார்ப்பு சான்றிதழ்கள்

சென்னை போலீசில் பாஸ்போர்ட் பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் ‘ஆன்-லைன்’ மூலம் பெறும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது தமிழக காவல்துறையில் ‘நடத்தை சரிபார்ப்பு சேவை’ என்ற புதிய இணையவழி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவையின் தொடக்கவிழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இணையவழி சேவை திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.

மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார்.

பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகை தாரரின் விவரம் சரிபார்ப்பு, வீட்டுவேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு ஆகிய சான்றிதழ்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

இதற்காக தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500-ம், தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000-மும் கட்டணமாக செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணையவழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒருமுறையினைப் பயன் படுத்தி மேற்படி கட்டணத் தொகையினை செலுத்தலாம்.

இதில் விண்ணப்பதாரர்களின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக காவல்துறை வசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர் ஏதேனும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா? என்ற விவரம் சரிபார்க்கப்படும்.

15 நாட்களுக்குள்...

தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரம் மட்டும் இதன் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் பணி முடிக்கப்படும். இந்த சான்றிதழை பெறுவதற்காக இனிமேல் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்திற்கு நேரடியாக செல்லவேண்டிய அவசியமில்லை.

இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் போலீஸ் கமிஷனருக்கோ, சம்பந்தப்பட்ட துணை கமிஷனருக்கோ அல்லது சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனருக்கோ மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடு இருந்தால் விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டண தொகையும் திருப்பித்தரப்படமாட்டாது. மேலும் விண்ணப்பதாரர்கள் காவல்துறைக்கு தவறான தகவல்களை அளித்தால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன், அருண், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, பாலகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Police verification services go online