போலீஸ் ஸ்டேஷனில் நூலகம்
கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில், 'போலீஸ் ஸ்டேஷன்கள் தோறும் நுாலகம்' திட்டத்தில் நுாலகம் திறக்கப்பட்டது.


கோவை மாவட்டம் எஸ்.பி., அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும், 'போலீஸ் ஸ்டேஷன்கள் தோறும் நுாலகம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகிலிருக்கும் பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


அதன்படி, போலீஸ் ஸ்டேஷன்களில், நுாலகம் துவங்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், நுாலகம் திறக்கப்பட்டது.வால்பாறை சப் - டிவிஷனுக்கு உட்பட்ட கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில், 79 புத்தகங்கள் பெறப்பட்டு நுாலகம் நேற்று திறக்கப்பட்டது.


பொதுமக்களுக்கு, இந்தியா, தமிழ்நாடு வரலாறு மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கான புத்தகங்கள், போலீசாருக்கான புலன் விசாரணை, குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்பட பல்வேறு புத்தகங்கள் வைக்கப்பட்டுஉள்ளது.கோட்டூர் போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம், போலீஸ் குடியிருப்பு உள்ளதால், அங்குள்ள போலீசாரின் குடும்பத்தினரும், போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பொதுமக்களும், நுாலகத்தை பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.