பல்கலைக்கழக மானியக்குழு அமைப்பை நீக்கிவிட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை தள்ளிவைக்க வேண்டும்:வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜி.விசுவநாதன்


பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அமைப்பை நீக்கிவிட்டு, இந்திய உயர்கல்வி ஆணையம் தொடங்கும் முடிவை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கல்வி மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அந்த அமைப்பின் தலைவரும், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜி.விசுவநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அமைப்பை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு சட்டம் மீது கருத்து தெரிவிக்க ஜூலை 20-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரம் பறிபோகும்

இந்த காலஅவகாசத்தை மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க வேண்டும். இந்த ஆணையம் வந்தால் மாநில அரசுகளின் உரிமைகள், அதிகாரங்கள் பறிபோகும். கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி அந்தஸ்தை இழக்கும். மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவியும். உயர்கல்வியில் சீர்திருத்தங்கள் அவசியம்தான். ஆனால், முழுமையான அணுகுமுறை முக்கியம். உயர்கல்வி ஆணையம் எவ்வித அரசியல், அதிகார தலையீடு இன்றி தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.

தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு

தற்போது ஆராய்ச்சி நிதிக்கு யுஜிசி-க்கு விண்ணப்பிக்கும் நிலை மாறி மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். புதிதாக அமையவுள்ள ஆணையத்தின் விதிமுறைகள் மீறப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆணையத்தில் இடம்பெறும் 12 உறுப்பினர்களில் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதால் உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு தள்ளிவைக்க வேண்டும். இந்த புதிய திட்டத்தை மாநிலங்களவை, மக்களவை எம்பிக்கள் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி அதன் பிறகு இறுதி முடிவெடுக்க வேண்டும்.

பிரதமரிடம் முறையிட ..

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போதும் இதுபோன்று ஓர் ஆணையம் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முறையிட்டதை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடமும், பிரதமரிடம் முறையிட உள்ளோம்.

வடஇந்தியாவில் 23 மாநிலங்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. தற்போது தனியார் பல்கலைக்கழகம் அமையும் 24-வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் 2 தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படுவதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.