விஐடியில்ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் 58 ஏழை மாணவர்களுக்கு இலவச சேர்க்கை


  |  

admission

விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் இலவச சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுடன் விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன், துணைத் தலைவர் ஜி.வி. செல்வம்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் 58 ஏழை மாணவர்களுக்கு விஐடியில் இலவச சேர்க்கைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு விஐடியில் பி.டெக். உள்ளிட்ட உயர்கல்வி இலவசமாக பயில வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 571 மாணவ, மாணவியருக்கு இந்த இலவச சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று, பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் ஒரு மாணவன், ஒரு மாணவி தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விஐடியில் உணவு, தங்கும் வசதியுடன் இலவசமாக உயர்கல்வி பயில ஸ்டார்ஸ் என்ற திட்டம் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விஐடி நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையம் மூலமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் மேல்நிலைப் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு இலவச சேர்க்கைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி விஐடியில் உள்ள அம்பேத்கர் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து 58 மாணவ, மாணவியருக்கு ஆணைகளை வழங்கி விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
நான் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றபோது, அங்கு கூகுள் நிறுவனத்திலும், அமேசான் நிறுவனத்திலும் அதிக சம்பளத்தில் பணியாற்றும் விஐடி முன்னாள் மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் இருவரும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் மூலம் பயின்றவர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களைப்போல் மாணவர்களாகிய நீங்களும் கடுமையாக பயின்று முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெறவேண்டும்.
விஐடி ஒழுக்கம், கட்டுப்பாடு கொண்ட நிறுவனம். மாணவர்களாகிய நீங்கள் இங்கு நல்ல பழக்க வழக்கங்களுடன் இருக்க வேண்டும். இங்குள்ள மாணவர்களுடன் பழகி அவர்களிடமிருந்து மொழி, கலாசாரத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல், தமிழ் மொழியை பிற மாநில மாணவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். கல்வி, அறிவை மட்டும் தருவது அல்ல. ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் காலம் தவறாமையையும் கற்றுத் தரக்கூடியது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:
விஐடி உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி என்பதைவிட கஷ்டப்பட்டு படித்து மேல்நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்கு கிடைத்த பரிசு என்று கொள்ளலாம். படிப்புக்கு எல்லை கிடையாது. மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். விஐடியில் கிடைத்த இந்த வாய்ப்பு மாணவர்களாகிய உங்கள் பெற்றோர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. கிராமப்புறங்களில் தமிழ் மொழிக் கல்வி படித்து வந்துள்ள மாணவர்கள் ஆங்கில மொழி பற்றி அச்சம் கொள்ளாமல் அதைக் கற்று கொள்ள முன்வர வேண்டும். அதற்கான அணைத்து வசதிகளும் இங்குள்ளன என்றார் அவர்.
நிகழ்ச்சியில், விஐடி சிஎஸ்ஆர்டி மற்றும் ஆர்எஸ் மையத்தின் பேராசிரியர் சுந்தரராஜன் வரவேற்றார். விஐடி துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே. சத்தியநாராயணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேராசிரியை எஸ்.மீனாட்சி நன்றி கூறினார்.