ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி - பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய தமிழக வீரர்கள்


மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பதக்கங்களை வென்று குவித்து, தாயகம் திரும்பியுள்ளனர். மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்பட பல நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 12 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவ, மாணவிகள் தமிழக பாரம்பரிய போட்டியான சிலம்பத்தில் சாதனை படைத்த‌து பெருமையாக உள்ளதாக தெரிவித்தனர்.முதலாவது ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்த 300 வீர்ர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 180 சிலம்பாட்ட வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். தனிநபர் பிரிவில்  சீர்காழியை சேர்ந்த மாற்று திறனாளி வீரர் விமல் 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.  சென்னை செவன் டு செவன் சிலம்பாட்ட கழகம் முதலிடத்தையும், சீர்காழியை சேர்ந்த வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.