வாழ்க்கையிலும் நான் வலிமையான பெண் தான்,'


''போட்டியில் மட்டுமில்லை, என் வாழ்க்கையிலும் நான் வலிமையான பெண் தான்,'' என, மாநில வலு துாக்கும் போட்டியில், மூன்று முறை, 'ஸ்ட்ராங் விமன்' பட்டம் வென்ற, வி.விஷாலி தெரிவித்தார்.பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் தான் என, சொல்வர். இந்த பலவீனத்தை பலமாக மாற்றி வருபவர் தான், சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி, வி.விஷாலி, 21. இவர், தமிழ்நாடு வலு துாக்கும் சங்கம் மற்றும் சென்னை மாவட்ட வலுதுாக்கும் சங்கம் சார்பில், சமீபத்தில் பெரம்பூரில் நடந்த மாநில அளவிலான வலுதுாக்கும் போட்டியில், 410 கிலோ துாக்கி, 'வலிமையான பெண்' என்ற பட்டத்தை வென்றார். அவரை சந்தித்து பேசினோம்.உங்கள் குடும்பம் மற்றும் உங்களை பற்றி சொல்லுங்கள்?என் அப்பா, வி.விஜயகுமார்; வங்கி ஊழியர். அம்மா ஜெயந்தி, எனக்கு, ஒரு தம்பி மற்றும் தங்கை இருக்கின்றனர். நான், சென்னை பல்கலையில், எம்.பி.ஏ., படித்து வருகிறேன்.வலு துாக்கும் போட்டி குறித்து சொல்லுங்களேன்?ஆங்கிலத்தில், 'வெயிட் லிப்டிங்' என்று சொல்லும் போட்டி தான், வலு துாக்கும் போட்டி. 'பவர் லிப்டிங்' என்பது, பளு துாக்கும் போட்டி. தலைக்கு கீழ் பகுதி வரை எடையை துாக்குவது வலு துாக்குவது, தலைக்கு மேல் துாக்குவது பளு துாக்குதல். வலு துாக்குதலில், 'ஸ்குவாட், டெட் லிப்ட் மற்றும் பெஞ்பிரஸ்' என, மூன்று பிரிவுகளும், பளு துாக்குதலில், 'கிளின் ஆன் ஜெர்க் மற்றும் ஸ்நாச்' என்ற இரு பிரிவுகளும் உள்ளன.இந்த விளையாட்டில் ஈடுபாடு வந்தது எப்படி?பள்ளியில் கபடி வீராங்கனையாக இருந்த நான், மாநில மற்றும் தேசிய அளவில் முதலிடத்தை வென்றுள்ளேன். 2015ல், பி.காம்., படித்த போது வலு துாக்கும் போட்டி குறித்து அறிந்து கொண்டேன். பின், 'மிஸ்டர் ஏஷியா' பட்டம் வென்ற மாஸ்டர், பி.மாயகிருஷ்ணனிடம் பயிற்சி பெற்று, போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.பங்கேற்ற போட்டிகள், வெற்றிகள் என்ன?மாநில அளவிலான, 10க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று, ஆறு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளேன். 2007, 2008 மற்றும் சமீபத்தில், சென்னை, பெரம்பூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில், 410 கி., எடை துாக்கி, 'ஸ்ட்ராங் விமன்' என்ற, 'வலிமை யான பெண்' பட்டம் வென்றுள்ளேன்.புதிய சாதனை முயற்சி?சமீபத்தில், சேலத்தில் நடந்த சீனியருக்கான மாநில போட்டியில், 'ஸ்குவாட்' பிரிவில், 182.5 கிலோ எடையை துாக்கி, மாநில சாதனையை முறியடித்துள்ளேன். இதற்கு முன், ஒரு வீராங்கனை, 180 கிலோ எடை துாக்கியதே சாதனையாக இருந்தது.அதிக எடை துாக்குவதால் பாதிப்பு உண்டா?பெண்கள், அதிகளவிலான எடை துாக்கும் போது, எதிர்காலத்தில் பிரச்னை வரும் என்ற பயம் உள்ளது. ஆனால், இந்த விளையாட்டில் ஈடுபடும் போது எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. மனதளவில் வலிமையான பெண்களை, இந்த விளையாட்டு, உடலளவிலும் வலிமையாக்கும் என்பதே நிதர்சனம்.சாதிக்க நினைப்பது?ஒரு முறை, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தும், நிதியுதவி இல்லாததால் பங்கேற்க முடியவில்லை. பஞ்சாபில், 20ம் தேதி நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றால், சர்வதேச போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். அதில், இந்தியாவிற்காக ஒரு தங்கமாவது வெல்ல வேண்டும்.உலக அரங்கில், இந்தியாவிற்காக தங்கம் வெல்லப் போகும் வலிமையான பெண் விஷாலிக்கு வாழ்த்துக்கள்.