"உரிய அங்கீகாரம் கிடைத்தால் ஒலிம்பிக்கிலும் வெல்வேன்" - செந்தில்குமார், சிலம்பாட்ட வீரர்சர்வதேச சிலம்பாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற கோவையை சேர்ந்த மாணவன் ஒலிம்பிக்கிலும் சாதிப்பேன் என நம்பிக்கையோடு கூறுகிறார்.
கோவை துடியலூரை அடுத்துள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரின் மகன் விக்னேஷ் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே சிலம்பம் மீது அதிக ஆர்வம் கொண்ட விக்னேஷ் அதை முறையாக கற்றுள்ளார். சிலம்பத்தின் மீது இருந்த அதீத ஆர்வத்தாலும் விடாத பயிற்சியாலும் பல்வேறு பரிசுகளையும் சிறுவயதில் இருந்தே பெற்றிருக்கிறார் விக்னேஷ். மாவட்ட அளவிலான போட்டிகள் மட்டுமின்றி தெற்காசிய போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளார். சமீபத்தில் வியட்நாமில் நடந்த சர்வதேச போட்டியில் விக்னேஷ் சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான், இந்தோனேஷியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்திருக்கிறார் விக்னேஷ். தற்போது ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறும் இவர், சிலம்பாட்டத்திற்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்கும் பட்சத்தில் ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் பெற்று சாதிக்க முடியும் என்கிறார் இந்த சாதனை மாணவன்..