செஸ் விளையாட்டை இந்தியர்கள் ஆள்வார்கள்!- விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி


IST உலக செஸ் சாம்பியன் பட்டப் போட்டியை முதலில் வென்ற ஆசியர், ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் ஆனவர், செஸ் விளையாட்டில் நீண்ட காலம் கோலோச்சுகிறவர் என்று சாதனைகளை விரித்திருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவில் செஸ் விளையாட்டை விஸ்தரித்ததில் முக்கியமானவர். இன்றைய இந்திய செஸ் களத்தை எப்படிப் பார்க்கிறார்? நம் முன்னிருக்கும் சவால்கள் என்ன? பேசினோம். 1988-ல் நீங்கள்தான் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை முதலில் வாங்கிய இந்தியர். இப்போது 54 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். உலக அளவில் ஆடவர் பிரிவில் ஆறாவது இடத்திலும், மகளிர் பிரிவில் ஏழாவது இடத்திலும் இந்தியா உள்ளது. இதற்கு நீங்களும் ஒரு முக்கியமான காரணம். இது உங்களுக்கு மனநிறைவு தருகிறதா? இந்தியாவில் செஸ் பரவவும் வலுவடையவும் நான் கிரியாஊக்கியாகச் செயல்பட்டிருக்கிறேன் என்பதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி, மன நிறைவு உண்டு. ஒருகாலத்தில் இந்தியர்களால் எட்டப்பட முடியாததாக இப்பட்டம் இருந்தது. உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்காக 2000-ல் அலெக்சி சிரோவுக்கு எதிராக விளையாடியபோது, இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் உலக சாம்பியன் ஆவேன் என்ற நம்பிக்கை இருந்தது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் பற்றி அப்படியொரு நம்பிக்கை ஏற்பட்டதில்லை. இரண்டு முழு ஆண்டுகள் பாடுபட்ட பிறகே வெற்றி கிட்டியது. ஒரு காலத்தில் உலக அரங்கில் செஸ் விளையாட்டில் நாம் இடம்பெறாமலேயே இருந்தோம். 54 கிராண்ட் மாஸ்டர்கள் என்பது மிகச் சிறந்த சாதனை. சதுரங்கம் என்ற செஸ் தோன்றியதே இந்தியாவில்தானே? உண்மைதான். செஸ் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிவருகிறது. 2050-ல் உலக சாம்பியனாக யார் இருப்பார் என்று மேக்னஸ் கார்ல்சனிடம் கடந்த ஆண்டு கேட்டபோது, “அதற்குள் இந்தியாவிலேயே பலர் சாம்பியனாகியிருப்பார்கள்” என்று பதில் அளித்தாராம். உயர்நிலை செஸ் சாம்பியன் போட்டி களில் பெண்டியாலா ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி, கிருஷ்ணன் சசிகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்கியுள்ள ஆர்.பிரக்ஞானனந்தா, நிஹல் சரின், அர்விந்த் சிதம்பரம், பி.இனியன், கார்த்திகேயன் முரளி ஆகியோரும் நம்பிக்கை தரும் வீரர்களாக உள்ளனர். செஸ் விளையாட்டை இந்தியர்கள் ஆள்வார்கள். உலகின் முதல் பத்து வீரர்கள் பட்டியலில் 1991-ல் இடம்பெற்றீர்கள், இன்னும் தொடர்கிறீர்கள், அதுபற்றி? 1991-ல் முதல் பத்தில் ஒருவராக இடம்பெற்றபோது சிலிர்ப்பாக இருந்தது. 1990-ல் மணிலாவில் நடைபெற்ற போட்டி மூலம் உலக சாம்பியன் பட்டப் போட்டியில் இடம்பெறத் தகுதி பெற்றதும், பிறகு சாம்பியன் ஆனதும் என் மனதைவிட்டு அகலவில்லை. அது மிகவும் இனிமையான காலம். அடுத்த 25 ஆண்டுகளுக்கும் முன்னணி வீரராக இருப்போம் என்று அப்போது நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. என்னுடைய கண்ணோட்டம் மாறியிருந்தாலும், இன்னமும் விளையாட்டில் ஆர்வமும் மகிழ்ச்சியும் குறையவில்லை. தொடர்ந்து விளையாட உத்வேகமாக இருப்பது எது? செஸ் இன்னமும் உற்சாகம் தரும் விளையாட்டாகவே இருப்பதும், நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது என்று நினைப்பதும். ஐந்து முறை உலக சேம்பியன் பட்டம் வென்ற உங்களுக்கு உலக விரைவு சாம்பியன் போட்டி ரியாத்தில் கடந்த ஆண்டு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது? வெற்றி எப்போதும் நிச்சயமில்லை என்பது புரிந்திருந்தாலும் அவ்வப்போது சில வெற்றிகள் தேவை. இல்லையென்றால் நீங்கள் செய்வது சரியா, தவறா என்றே தெரியாது. அந்தப் போட்டிக்கு முன்னால் நானிருந்த நிலையில், முதல் ஆறு இடங்களில் ஒருவனாக வந்தாலே சிறப்பு என்று நினைத்தேன். ஆனால் சாம்பியன் பட்டம் வென்ற சில மணி நேரங்களுக்கு எனக்குள் பரவசம் ஏற்பட்டது, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. பிறகு, பத்து நிமிடங்களுக்குள் ஆடி முடிக்கும் போட்டிப் பிரிவில் மூன்றாவதாக வந்தேன். அதுவும் நான் எதிர்பாராதது. யாருடனாவது பேச வேண்டும்போல் இருந்தது. விடியற்காலை 3 மணிக்கு விமானத்தைப் பிடித்தால் அபுதாபி சென்று அங்கிருந்து கொச்சி சென்றுவிடலாம். குடும்பத்தினர் அங்கு இருந்தனர். சில சாதனைகளைச் செய்த பிறகு அதைக் கொண்டாட வேண்டும். அதற்கு முன்னரும் அப்படி நடந்திருக்கிறது. உலக சேம்பியன் பட்டத்துக்காக சென்னையில் நடந்த போட்டியில் கார்ல்ஸனுடன் தோற்ற பிறகு, 2014-ல் கேண்டிடேட்ஸ் போட்டியில் கான்டி-மன்சிய்ஸ்க்கை வென்றதும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2013-ல் சென்னை போட்டியில் ஏற்பட்டதுதான் எனக்குப் பெருந்தோல்வி. இந்தப் பிரிவு போட்டிகளில் இனி விளையாட வாய்ப்பு கிட்டாது என்றே மனம் சோர்ந்தேன். இனி செஸ் போட்டிகளில் என்ன செய்யப்போகிறேன் என்றே தெரியாமல் குழம்பினேன். மிகவும் மன அழுத்தத்துக்கும் ஆளானேன். அதன் பிறகு நடந்த போட்டியில் இன்னும் ஒரு சுற்று ஆட்டம் இருக்கும்போதே புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றேன். இம்மாதிரியான தருணங்களில் ஆழ்ந்த மகிழ்ச்சி எப்போதாவதுதான் வரும். வந்தவுடன் விரைவிலேயே அடங்கிவிடும். அப்படிப்பட்ட கணங்களுக்காகத்தான் வாழ்கிறேன். ரியாத்தில் நடந்த போட்டியை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன். உலக சாம்பியன் போட்டிகளில் இருமுறை உங்களைத் தோற்கடித்த கார்ல்சனை வென்றதுதான் மகிழ்ச்சியின் உச்சமா? ஆமாம். ரியாத் போட்டியில் கலந்துகொள்ளுமாறு உங்கள் மனைவி அருணாதானே உங்களிடம் வற்புறுத்தினார்? ஆமாம். என்னுடைய வாழ்க்கையின் அங்கம் அவர். எனக்காக அவர் (மேலாளராக) செய்துள்ளவற்றை என்னால் பட்டியலிடவே முடியாது. உங்களை உலகின் மென்மையான கிராண்ட் மாஸ்டர் என்கிறார்கள். இவ்விளையாட்டில் மென்மையானவர்கள் வெல்வதில்லை என்று கூறுவார்கள். போட்டிகளில் தோல்வியுற்ற சமயங்களில் நீங்கள் இதை நினைத்ததுண்டா? ஆம், நானும் சில வேளைகளில் நினைத்ததுண்டு. மென்மையாக இருப்பதுதான் வெற்றிக்குத் தடையாக இருக்கிறதா என்று வியப்படைவேன். ஆனால், என்னால் வேறு விதமாக இருக்க முடியாது. முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ், உங்களை காபி அவுஸ் பிளேயர் என்று இகழ்ச்சியாகக் கூறியிருக்கிறாரே? அது என்னைப் பாதித்ததே இல்லை. விக்டர் கோர்ச்னாய் அவரைவிட மோசமாகப் பேசியிருக்கிறார். “என்னால் செஸ் ஆட முடியாது, சில யுக்திகளை மட்டுமே கையாள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். என்னுடைய ஹாலந்து நண்பர் ஜெரோன் பிக்கெட் இதன் பின்னால் உள்ள உளவியலைப் போட்டு உடைத்துவிட்டார். “கோர்ச்னாய் என்னிடம், நீ மிகச் சிறந்த ஆட்டக்காரன் என்று புகழ்ந்திருக்கிறார். உன்னை இகழவும் என்னைப் புகழவும் காரணம் ஒன்றுதான். நான் அவரைத் தோற்கடித்ததே கிடையாது, நீ அவரிடம் தோற்றதே கிடையாது” என்றார் ஜெரோன் பிக்கெட். உங்களுடைய பெயரில் சிறிய கோள்கூட இருக்கிறதாமே? அந்தச் செய்தி ஏப்ரல் 1-ல் வெளியானதால், கேலியாகக் கூறுகிறார்களோ என்றுகூட சந்தேகப்பட்டேன். பிறகு, உண்மை என்று தெரிந்தபோது பெருமிதப்பட்டேன். வானவியல் எனக்குப் பொழுதுபோக்கு. இப்போது என்ன புத்தகம் படிக்கிறீர்கள்? ஜேம்ஸ் கிராப்ட்ரீ (James Crabtree) எழுதியுள்ள தி பில்லியனேர் ராஜ் (The Billionaire Raj) என்ற புத்தகத்தைப் படித்துவருகிறேன். மிகவும் அலசி ஆராய்ந்து சுவையாக எழுதியிருக்கிறார். ஓரிருமுறை அவர் என்னைப் பேட்டி கண்டிருக்கிறார்.