தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள்.-பெண் ரூபத்திலான இந்த ‘செங்கிஸ் கான்’கள்.சாதனைக்குத் தடையாக இருக்கும் ஏழ்மை-சர்வதேச போட்டிக்குத் தகுதி பெற்றும் நிதி வசதியின்மை


சாதனைக்குத் தடையாக இருக்கும் ஏழ்மை

கராத்தே, குங்பூ, ஜூடோ மாதிரியான தற்காப்புக் கலைகள் நமக்குத் தெரியுமோ இல்லையோ. இந்த அடிதடி விளையாட்டுகளின் பெயர்கள் நமக்கு அத்துப்படி! ஆனால், ‘டேக்வாண்டோ’ என்ற தற்காப்புக் கலையை எத்தனை பேருக்குத் தெரியும்? இத்தனைக்கும் கராத்தே இதுவரை ஒலிம்பிக்கில் இடம்பெறவில்லை. ஆனால், டேக்வாண்டோ கடந்த 30 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இடம்பெற்றுவருகிறது.

அப்படிப்பட்ட டேக்வாண்டோ விளையாட்டைத் தேசிய அளவில் விளையாடிப் பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு யுவதிகள். பஞ்சாபில் ஜலந்தர் நகரில் அண்மையில் ‘5-வது மாணவர்கள் ஒலிம்பிக்ஸ் தேசிய விளையாட்டு போட்டி’கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு சார்பில் டேக்வாண்டோவில் போட்டியிட்டு ஏழு தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள். அதெப்படி இத்தனை பதக்கங்களை வெல்ல முடியும் என்கிறீர்களா?

வயதுவாரியாகவும் உடல் எடையை அடிப்படையாகவும் கொண்டு வெவ்வேறு பிரிவுகளில் டேக்வாண்டோ நடத்தப்படுகிறது. டேக்வாண்டோ மட்டுமல்ல; குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ, சதுரங்கம், கேரம், யோகா, கராத்தே ஆகிய போட்டிகள் அனைத்தும் வயது மற்றும் உடல் எடையைத் தகுதிகளாக வைத்துத்தான் நடத்தப்படுகின்றன. இப்படியாக நடத்தப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டியில் 100 தங்கம், 100 வெள்ளி, 100 வெண்கலப் பதக்கங்கள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

கே.ஜி. முதல் பி.ஜி.வரை படிக்கும் மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர். பத்து விதமான போட்டிகளில், 1,500-க்கும் மேற்பட்டோரும் டேக்வாண்டோவில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர். அதில் தஞ்சை மாணவிகளான குரலரசி, ஷண்முகப்பிரியா, உதயமதி, துர்கா, சீதா லட்சுமி, அகிலா, மஞ்சு, ஆகியோர் தங்கமும் தனலட்சுமி, சங்கவி, அகல்யா ஆகியோர் வெள்ளியும் ஐஸ்வர்யா வெண்கலப் பதக்கமும் வென்றிருக்கிறார்கள். இவர்களில் தங்கம் வென்று முதலிடத்தைப் பிடித்தவர்கள் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் ‘மாணவர்கள் ஒலிம்பிக்ஸ் சர்வதேச விளையாட்டுப் போட்டி’யில் பங்கேற்பதற்கான பயிற்சியில் முழுமூச்சாக இறங்கிவிட்டார்கள்.

சிறு நகரங்களைச் சேர்ந்த இந்த மாணவிகள், கால் பலத்தைப் பிரயோகித்து ஆடப்படும் கடுமையான விளையாட்டான டேக்வாண்டோவில் தங்கத் தாரகைகளானது எப்படி?

“ஒரத்தநாடுல இருந்து கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டர் பஸ்ஸூல தினமும் பயணம் செஞ்சுதான் தஞ்சாவூர்ல இருக்க எங்களுடைய கல்லூரிக்கு வந்து படிச்சிட்டிருக்கேன். விளையாட்டுல ஆர்வம் இருந்தாலும் குடும்பச் சூழல் அதுக்கு இடம் கொடுக்கல. ஊக்குவிக்கவும் ஆளில்லை. நான் மட்டுமில்ல, போட்டியில் பங்கேற்ற எல்லாப் பொண்ணுங்களுமே இப்படித்தான் குக்கிராமங்கள்ல இருந்து வந்துதான் கல்லூரியிலப் படிச்சிட்டிருக்கோம். எங்களுடைய விளையாட்டுத் திறமைய கண்டுபிடிச்சு அது மூலமா சாதனை, வேலைவாய்ப்பு போன்ற எதிர்காலம் இருக்குன்னு எங்களுக்கும் எங்களுடைய பெற்றோருக்கும் புரிய வைச்சது பயிற்சியாளர் சுந்தரமூர்த்திதான்” என்று பேசத் தொடங்கினார் குழுத் தலைவி குரலரசி.

அவரைத் தொடர்ந்த அகிலா, “எப்படியாவது வாழ்க்கையோட அடுத்த கட்டத்த எட்டிப்பிடிக்கணுங்கிற துடிப்பு இருந்தாலும், தேசிய அளவுல வட மாநிலத்தவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியுமானு சின்னதா பயம் இருந்துச்சு. ஆனா டேக்வாண்டோ விளையாட்டுல தசை பலத்தைவிட எலும்பு வலிமைதான் முக்கியம். இதைவிட முக்கியம் விளையாட்டோட சூட்சுமம். வட மாநிலத்தவங்களைவிட உருவத்தில் நம்ம ஊரு பொண்ணுங்க சிறுசா தெரிஞ்சாலும் அதுவே நம்முடைய பலம். இந்த விளையாட்டுல காலைத் தூக்கித் தலையில தட்டுனாலும் முகத்துல தட்டுனாலும் 3 புள்ளிகள். அதே சுழற்றியடித்தால் 5 புள்ளிகள். நெஞ்சில நேரடியாகத் தட்டினால் 1 புள்ளி, சுழற்றித் தட்டினால் 4 புள்ளி. இதுல விவகாரம் அவங்களோட உடலோடு இல்லாம உளவியலோட விளையாடுறதுலதான் இருக்கு. நம்மளோட உயரத்துக்கு அவங்க தலையில தட்டுறது கஷ்டம். ஆனால், கன்னத்துல தட்டுனா புள்ளியும் கிடைக்கும் சட்டுனு அவங் களைச் சுலபமா தடுமாறவும் செய்ய முடியும். இப்படித்தான் வெற்றியை வசப்படுத்தினோம்” என்கிறார்.

பளபளக்கும் பதக்கங்களுடன் உற்சாகமாக நின்றாலும் தங்களுடைய பொருளாதாரப் பின்னடைவுகளைத் தாண்டி சர்வதேச அளவில் நடைபெறவிருக்கும் அடுத்த கட்டப் போட்டிக்கான பயணச் செலவு முதல் அனைத்தையும் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற கவலை ரேகையும் இவர்களுடைய முகத்தில் இழையோடவே செய்கிறது. ஆனால், எதுவாக இருந்தாலும் ‘‘நாங்க சமாளிப்போம்’” என்று கோரஸாகச் சொல்கிறார்கள் தங்களுடைய குறையையும் நிறையாக மாற்றும் பெண் ரூபத்திலான இந்த ‘செங்கிஸ் கான்’கள்.

team

சர்வதேச டேக்வாண்டோ போட்டிக்குத் தகுதி பெற்று நிதியுதவிக்காகக் காத்திருக்கும் மாணவ, மாணவிகள்.


தேசிய டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற தஞ்சாவூர் மாணவிகள், சர்வதேச போட்டிக்குத் தகுதி பெற்றும் நிதி வசதியின்மையால் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
தஞ்சாவூரில் ஜூன் 28-ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் குந்தவை நாச்சியார் அரசுக் கல்லூரியைச் சேர்ந்த 11 மாணவிகள் தங்கப் பதக்கத்தை வென்றனர். இதன் மூலம் அனைவரும் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பகுவாராவில் ஜூலை 12 முதல் 14-ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 17 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் குந்தவை நாச்சியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 7 பேர் தங்கப் பதக்கமும், 3 பேர் வெள்ளிப் பதக்கமும், ஒருவர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இப்போட்டியின் மூலம் தங்கப் பதக்கம் வென்ற என். குறளரசி (எம்.எஸ்ஸி. கணிதம் இரண்டாமாண்டு), ஏ. சண்முகப்ரியா (பி.ஏ. ஆங்கிலம் மூன்றாமாண்டு), என். சீதாலஷ்மி (பி.எஸ்ஸி. கணிதம் இரண்டாமாண்டு), எஸ். மஞ்சு (பி.ஏ. வரலாறு இரண்டாமாண்டு), ஜி. அகிலா (பி.ஏ. தமிழ் இரண்டாமாண்டு), டி. உதயமதி (பி.எஸ். பொருளியல் மூன்றாமாண்டு), ஆர். துர்கா (பி.எஸ்ஸி. இயற்பியல் மூன்றாமாண்டு) ஆகியோர் சர்வதேச போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
தாய்லாந்து நாட்டில் 3 மாதங்களில் சர்வதேச போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில், குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகள் 7 பேர் பங்கேற்கத் தகுதி பெற்றிருந்தாலும், இவர்களிடம் தாய்லாந்து நாட்டுக்குச் செல்வதற்கு நிதி வசதி இல்லை. 
இதுகுறித்து அக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் தேன்மொழி, பயிற்சியாளர் சுந்தர் ஆகியோர் கூறியது: பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிக்கு இக்கல்லூரி மாணவிகள் தங்களுடைய சொந்த செலவில் சென்று வந்தனர். இதில், ஒவ்வொருக்கும் தலா ரூ. 5,000 செலவானது. மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களுடைய திறனையும் வளர்த்துக் கொண்டதால்தான் இந்த அளவுக்குச் சாதனைப் படைக்க முடிந்தது. இதற்கு இக்கல்லூரியும் ஊக்கம் அளித்தது. 
தாய்லாந்தில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்று திரும்ப ஒருவருக்கு விசா, பயணக் கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு ரூ. 60,000 வீதம் செலவாகும். சர்வதேசப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இவர்களிடம் தகுதியும், திறமையும் இருக்கிறது. அதில் வெற்றி பெற்றால், உலக அளவில் நம் நாட்டுக்கும் பெருமை. இதன் மூலம் இவர்களுக்குத் தேசிய அளவிலான விருதும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.
வீராங்கனை குறளரசி கூறுகையில்: கல்விக் கட்டணம் செலுத்துவதற்கே மிகவும் சிரமப்படும் நிலையிலும் டேக்வாண்டோ போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் சாதனை படைத்தாலும், இவர்களுக்கு நிதி வசதி இல்லாதது மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. நிதியுதவி கிடைக்காவிட்டால் சர்வதேச போட்டியில் பங்கேற்க இயலாது என்றார்.
கிராமப்புற வீரர்களுக்கு நிதி வசதி இல்லாததால் விளையாட்டில் சாதனைப் படைப்பதற்கு எட்டாக்கனியாக இருக்கிறது. இவர்களை ஊக்கப்படுத்தும் அளவுக்கு அரசுத் தரப்பிலும் உதவி கிடைக்காததால், ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பது வேதனைக்குரியது.