மகளிர் சதுரங்கத்தில் விஜயலட்சுமி ஒரு ஜாம்பவான்


 1. டி. கார்த்திக்சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படும் யானை, குதிரை, படை வீரர்களை வைத்து விளையாடும் வயதுகூட அப்போது அந்தக் குழந்தைக்கு இல்லை. அந்தக் குழந்தைக்கு மூன்றரை வயதுதான். ஆனால், குழந்தையாகச் சதுரங்கப் பயணத்தைத் தொடங்கிய அவர் குமரியாக ஆனபோது இந்தியா கொண்டாடும் வீராங்கனையானார். அவர், இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர்,  இந்தியாவின் முதல் பெண் சர்வதேச மாஸ்டர் என அழைக்கப்படும் விஜயலட்சுமி சுப்பராமன்.

  சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமிக்குச் சதுரங்க விளையாட்டை அறிமுகப்படுத்தியவர் அவருடைய அப்பாதான். அவர்தான் விஜயலட்சுமிக்குச் சதுரங்க விளையாட்டின் விதிமுறைகளைக் கற்றுக்கொடுத்தார். விஜயலட்சுமியின் அப்பாதான் அவருடைய சதுரங்க விளையாட்டின் முதல் குரு. சதுரங்க விளையாட்டைக் கற்றுகொடுத்தது மட்டுமல்ல, அவரோடு தொடர்ந்து  விளையாடிக்கொண்டேயிருந்தார். அப்படி அவர் தொடர்ந்து விளையாடியது விஜயலட்சுமிக்கு  நல்ல பயிற்சியாக அமைந்தது. சதுரங்க விளையாட்டு அவருக்குள் ஆழமாக ஊடுருவியது. 

   

  சிறுமியாகச் சாதனை

  சிறுமியாக இருந்தபோதே ஏராளமான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார். 7 வயதானபோது விஜயலட்சுமி சதுரங்க விளையாட்டின்  முதல் போட்டியில் காலடி எடுத்துவைத்தார். 1986-ம் ஆண்டில் ‘டால்’ சதுரங்க ஓபன் போட்டியில் பங்கேற்றார். 1988 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் பத்து வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் வெற்றிபெற்றுத் தன்னை மெருகேற்றிக்கொண்டார். 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவிலும் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார் விஜயலட்சுமி.

  லட்சியப் பயணம்

  ஜூனியர் பிரிவுகளிலிருந்து சீனியர் பிரிவுகளுக்கு மாறும் தருணத்தில், அவரது சதுரங்கப் பயணம் வெற்றிகரமாகத் தொடங்கியது. 1995-ம் ஆண்டில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் விஜயலட்சுமிதான் சாம்பியன். முதன்முறையாகத் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், அந்தக் கொண்டாட்டத்துக்குக்கூட விஜயலட்சுமிக்கு நேரமில்லை.

  ஏனென்றால், ஆசிய மண்டலப் போட்டிக்காக அவர் கடுமையாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. ‘பெண் கிராண்ட் மாஸ்டர்’ ஆவதற்கான முயற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். கிராண்ட் மாஸ்டரில் மூன்று நிலைகளைத் தாண்டினால்தான் சர்வதேச மாஸ்டராக முடியும் என்பதால் விஜயலட்சுமியின் கவனம் எல்லாம் சர்வதேசப் போட்டித் தொடர்களில்தான் இருந்தது. 

  பெருமைமிகு அந்தஸ்து

  1996-ம் ஆண்டில் கொல்கத்தாவில் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் வெற்றிபெற்று சாதித்தார் விஜயலட்சுமி. இதன்மூலம் காமன்வெல்த் மகளிர் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமை அவரை அலங்கரித்தது.

  அந்த ஆண்டிலேயே விஜயலட்சுமி பெண் கிராண்ட்  மாஸ்டராக உருவெடுத்தார். அப்போது சென்னையில் நடைபெற்ற எப்.ஐ.டி.இ. (சர்வதேச செஸ் கூட்டமைப்பு) மண்டலப் போட்டியில் பட்டம் வென்றதன்மூலம் ‘பெண் கிராண்ட் மாஸ்டர்’ அந்தஸ்து அவருக்குக் கிடைத்தது. இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பும் அவருக்குக் கிடைத்தது.

  அதன் பிறகு சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தைப் பிடிக்க விஜயலட்சுமி தீவிரம் காட்டத் தொடங்கினார். அதற்கேற்றாற்போல் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வெற்றிக்கொடியை உயரப் பறக்கவிட்டார். 1997-ம் ஆண்டில் டெஹ்ரானில் ஆசிய மண்டலச் சதுரங்கப் போட்டியில் முதலிடம் பிடித்து விஜயலட்சுமி சாம்பியன் ஆனார். 1999-ம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற ஆசிய மண்டலப் போட்டியிலும் விஜயலட்சுமியே வெற்றி வீராங்கனை. 2003-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இதே தொடரில் மீண்டும் வெற்றிபெற்றார் விஜயலட்சுமி.

  தேசிய சாம்பியன்

  தொடர்ந்து சர்வதேசப் போட்டித் தொடர்களில் பங்கேற்ற வேளையிலும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளையும் விட்டுவைக்கவில்லை. சதுரங்கப் போட்டியில் இந்திய மகளிர் சாம்பியன்ஷிப் பட்டத்தை விஜயலட்சுமி பலமுறை வென்றிருகிறார்.  1995 (சென்னை), 1996 (கொல்கத்தா), 1999 (கோழிக்கோடு), 2000 (மும்பை), 2001 (டெல்லி), 2002 (லக்னோ) ஆகிய நகரங்களில் நடைபெற்ற தேசிய சதுரங்கப் போட்டிகளில்  சாம்பியன் பட்டத்தை விஜயலட்சுமி வென்றிருக்கிறார்.

  ஒலிம்பியாட் நாயகி

  சதுரங்கப் போட்டியில் முக்கியமான போட்டித் தொடராக ‘செஸ் ஒலிம்பியாட்’ பார்க்கப்படுகிறது. உலகில் உள்ள எல்லா சதுரங்க வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கும் இந்தத் தொடரை சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு (எப்.ஐ.டி.இ.) நடத்திவருகிறது. இந்தத் தொடரிலும் விஜயலட்சுமி காலடி எடுத்துவைத்தார்.

  1998-ம் ஆண்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி சார்பில் விஜயலட்சுமியும் பங்கேற்றார். 2000-ம் ஆண்டில் இஸ்தான்புல்லில் நடைபெற்ற 34-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார் விஜயலட்சுமி.

  முதல் சர்வதேச மாஸ்டர்

  பெண் கிராண்ட் மாஸ்டராக இருந்த விஜயலட்சுமி, சிறப்பான வெற்றிகள் மூலம் மூன்று நிலைகளைத் தாண்டிப் புள்ளிகளைப் பெற்று சர்வதேச மாஸ்டராக உருவெடுத்தார். 2000-ம் ஆண்டில் செஸ் ஒலிம்பியாட்டில் பெற்ற புள்ளிகள் அவர் சர்வதேச மாஸ்டராக உதவின. 2001-ம் ஆண்டில் இந்தச் சாதனையை விஜயலட்சுமி படைத்தார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பெண் சர்வதேச மாஸ்டர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார். ‘பெண் கிராண்ட் மாஸ்டர்’, ‘சர்வதேச மாஸ்டர்’ என்ற இரண்டு பெருமைகளையும் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெரும் புகழை பெற்றார்.

  சர்வதேச மாஸ்டர் என்ற நிலையை அடைந்தபிறகு அவரது சதுரங்கப் பயணம் நிறைவடையவில்லை. 2005-ல் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ‘அசென்டாஸ்’ மகளிர் போட்டியில் டை பிரேக்கரில் ஆறரைப் புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்தார். ஆனால், இந்தக் காலகட்டத்தில் 2,485 புள்ளிகளைக் குவித்து வைத்திருந்தார். அவரது சதுரங்க வாழ்க்கையில் அவர் பெற்ற அதிகப் பட்ச புள்ளியாக இது அமைந்தது. 2006-ல் ஜெர்மனியில் நடந்த எல்.ஜி.ஏ. தொடரில் பங்கேற்றது, 2007-ல்  இத்தாலியில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தது,

  2016-ம் ஆண்டில் சென்னை ஓபனில் ரஷ்ய சர்வதேச மாஸ்டர் போரிஸ் கிராச்சவை டை பிரேக்கர்வரை கொண்டுவந்து ஆட்டத்தைப் பரபரப்பாக்கியது போன்ற நினைவுகொள்ளத்தக்க ஆட்டங்கள் விஜயலட்சுமிக்கு நிறைய உண்டு.

  சாதனை வீராங்கனை

  எப்.ஐ.டி.இ. பட்டத்தை இந்தியாவுக்காக வென்ற முதல் வீராங்கனை, மற்ற இந்திய வீரர், வீராங்கனைகளைவிட செஸ் ஒலிம்பியாட்டில்  அதிக பட்டங்களை வென்ற வீராங்கனை, தேசிய அளவில் நடைபெற்ற வயதுக்கு உட்பட்டோருக்கான எல்லா குரூப் போட்டிகளிலும் வெற்றிபெற்ற வீராங்கனை எனச் சதுரங்கப் போட்டியில் விஜயலட்சுமி பெறாத பட்டங்களோ பதக்கங்களோ எதுவும் இல்லை. சதுரங்க விளையாட்டில் தொடர்ந்து சாதனைகள் படைத்த விஜயலட்சுமியைப் பாராட்டி

  2001-ம் ஆண்டில் அவருக்கு அர்ஜூனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

  இன்று இந்தியாவில் கொனேரு, ஹம்பி ஹரிகா எனச் சில பெண்கள் சதுரங்க விளையாட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் விஜயலட்சுமி மட்டுமே இருந்தார். மகளிர் சதுரங்கத்தில் அவர் ஒரு ஜாம்பவான்