வருங்காலத்தில் யோகாமருத்துவர் ஆகணும்'' - யோகா சாம்பியன் தர்ஷினி.


குனிந்து ஒரு பொருளை எடுப்பதையே பெரும் கஷ்டமாக நினைக்கும் இன்றைய இளம் தலைமுறைகளுக்கு மத்தியில், தனக்கே உரிய சுட்டித்தனத்துடன் வரிசையாகப் பல ஆசனங்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டே செய்துகாட்டி அசத்தினார் தர்ஷினி. 

``தினந்தோறும் 6 மணிநேர யோகா பயிற்சியே இந்திய அளவில் இடம்பெற வைத்தது

டல் ஆரோக்கியத்துக்கு யோகா நல்லது என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம். ஆனால், `அதுக்கெல்லாம் எங்கேங்க நேரம் இருக்கு. ஓடற ஓட்டத்துக்கு ஒருநாளுக்கு 28 மணி நேரம் இருக்கக் கூடாதான்னு தோணுது' என்கிறவர்கள் பலர். ஆனால், ஒருநாளில் 6  மணி நேரம் யோகா செய்கிறார் மாணவி தர்ஷினி.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ.ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் தர்ஷினி, யோகா என்ற சொல்லைக் கேட்டாலே உற்சாகமாகிறார். 5 வயதிலிருந்து யோகா பயிலும் இவர் 500 வகையான யோகாசனங்களைக் கற்றுள்ளார்.

யோகா தர்ஷினி

 

``என் அப்பா பேர் கண்ணன். அவர்தான் எனக்கு முதலில் யோகா சொல்லித்தந்தார். நாங்க வசதியானவங்க இல்ல. ஆனாலும், எனக்காக ஊட்டச்சத்தான சாப்பாடுகளை வாங்கிக்கொடுகிறதில் அக்கறையா இருப்பார். சண்முகம் ஐயாகிட்ட யோகா கிளாஸுக்குப் போக ஆரம்பித்தேன். என் அப்பாவும் அவர்கிட்டதான் யோகா கத்துக்கிட்டார். காலையில் எழுந்து யோகா செய்துட்டுத்தான் மற்ற விஷயங்களை ஆரம்பிப்பேன். இது ஒருநாளும் தவறினதில்லை. உடம்பும் ஆரோக்கியமா சுறுசுறுப்பா இருக்கும்; மனசும் உற்சாகமாகிடும். படிப்பு, விளையாட்டுன்னு ஒவ்வொரு நாளுமே சிறப்பா இருக்கும்'' எனப் புன்னகைக்கிறார் தர்ஷினி.

கடினமான யோகாசனம் என்று சொன்னாலே அதைச் சவாலாக ஏற்று செய்துபார்த்துவிடுவது தர்ஷினியின் ஸ்டைல். குனிந்து ஒரு பொருளை எடுப்பதையே பெரும் கஷ்டமாக நினைக்கும் இன்றைய இளம் தலைமுறைகளுக்கு மத்தியில், தனக்கே உரிய சுட்டித்தனத்துடன் வரிசையாகப் பல ஆசனங்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டே செய்துகாட்டி அசத்தினார் தர்ஷினி. 

yoga

துவிபாத துருவாசனம், சக்ரபந்தாசனம், பூரணா சலபாசனம், கந்தாதசனம், மூலபந்தாசனம், யாமதேவ விருச்சகாசனம், விரிச்சி விருச்சகாசனம், துருவாசனம், டிரங்கமுத்துராசானம், ஹனுமனாசனம், திருவிகரமசானம் என அவர் சொல்லும் பெயர்களை நாம் மனதில் ஏற்றித் திருப்பிச் சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆசனங்களைச் செய்துமுடித்து சிரிக்கிறார். `இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இருக்கு'' என்கிறார் அழகான புன்னகையுடன்.

``யோகா சம்பந்தமான போட்டிகள் எங்கு நடந்தாலும் முதல் ஆளா பெயர் கொடுத்துருவேன். பரிசுடன்தான் திரும்பி வருவேன். ஒவ்வொரு முறை பரிசைக் கையில் வாங்கும்போதும், `இது ஆரம்பம் மாதிரிதான். இன்னும் நிறைய இருக்கு'னு எனக்கு நானே சொல்லிப்பேன். மாவட்ட அளவில் பலமுறை ஜெயிச்சிருக்கேன். அப்புறம், மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக்கிட்டேன். 2016-ம் வருஷம், ஜம்மு காஷ்மீரில் நடந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வாங்கினேன். 2017-ம் வருஷம், தமிழக அணி சார்பில் தேசிய யோகா போட்டியில் A கிரேடு. 2018 தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டிகள் டெல்லியில் நடந்துச்சு. அதில்,  தமிழக அணி சார்பில் கலந்துக்கிட்டேன். தமிழ்நாடு சிறப்பு யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியிலும் சாம்பியன்ஷிப் பட்டம் வாங்கினேன். மத்தியப்பிரதேச யோகா சங்கமும் அகில இந்திய யோகா விளையாட்டுச் சங்கமும் இணைந்து செப்டம்பர் 14 முதல் 16 வரை உஜ்ஜனியில் நடத்தின போட்டியில், தேசிய அளவில் இரண்டாம் இடம்பிடிச்சேன்" என வெற்றிப் பதக்கங்களின் பட்டியலைச் சொல்லிக்கொண்டே போகிறார் தர்ஷினி.

 

 

yoga

தர்ஷினியின் இந்த வெற்றிகள் மூலம், சீனாவில் நடைபெறவுள்ள உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். ``என் இந்த வெற்றிகளுக்கு வழிகாட்டியாக இருந்த அப்பா, அம்மா, பள்ளித் தாளாளர் மு.வடுகநாதன், தலைமையாசிரியர் வசந்தா, உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் எல்லோருக்கும் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். வருங்காலத்தில் யோகாமருத்துவர் ஆகணும்'' என்கிறார் யோகா சாம்பியன் தர்ஷினி.