சென்னையின் எப்.சி., ‘சாம்பியன்’ பட்டத்தை விட்டுக்கொடுக்காது பயிற்சியாளர் ஜான் கிரேகரியின் பிரத்யேக பேட்டி


சென்னையின் எப்.சி., ‘சாம்பியன்’ பட்டத்தை விட்டுக்கொடுக்காது

பயிற்சியாளர் ஜான் கிரேகரியின் பிரத்யேக பேட்டி
Image result for chennaiyin fc coach 2018
2017-ம் சீசனில் வென்ற ஐ.எஸ்.எல்.கோப்பையுடன் ஜான் கிரேகரி
ஜான் கிரேகரி

ஜான் கிரே–கரி, சென்–னை–யின் எப்.சி. கால்–பந்து அணி–யின் வெற்–றிப் பயிற்–சி–யா–ளர் என்று புக–ழப்–ப–டு–ப–வர். பயிற்–சி–யா–ள–ராக பொறுப்–பேற்ற முதல் வரு–டமே (2017 சீசன்) ஐ.எஸ்.எல். கோப்–பையை வென்–றுக்–கொ–டுத்து, அசத்–தி–னார். இங்–கி–லாந்தை சேர்ந்–த–வ–ரான ஜான் கிரே–கரி, இந்த வரு–ட–மும், சென்–னை–யின் எப்.சி. அணிக்கு பயிற்–சி–யா–ள–ராக தொட–ரு–கி–றார். நடப்பு சாம்–பி–யன் என்ற உத்–வே–கத்–து–டன் மீண்–டும் கோப்–பையை தக்–க–வைக்–கும் முனைப்–போடு சென்னை அணி– யு–டன் களம் இறங்–கி–யி–ருக்–கும் கிரே–க–ரி–யு–டன் பிரத்–யேக கலந்–து–ரை–யா–டல்:

ஐ.எஸ்.எல். போட்டிகளின் வெற்றி பயிற்சியாளராக இருப்பது பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் வருடமே (2017), கோப்பையை வென்றது மறக்க முடியாத ஒன்று. ஆனால் அந்த வெற்றி ஒன்றுமில்லாதது போல, தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். ஏனெனில் கடந்த வருட வெற்றியை மறந்தால்தான், இந்த சீசனில் வெற்றி பெற முடியும். கடந்த வருடம் கிடைத்த வெற்றியை, இந்த வருடமும் தக்கவைக்க, தீவிரமாக போராடுவோம்.  அதேபோல, ஏ.எப்.சி. கோப்பையில் விளையாட கிடைத்திருக்கும் வாய்ப்பையும் வெற்றி வாய்ப்பாக மாற்றுவோம்.

கிரேகரி என்றால் அதிரடி என்கிறார்களே? உண்மைதானா?

(சிரிக்கிறார்) நான் அதிரடியான பயிற்சியாளரா, இல்லையா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை, ஆனால் நானும் எனது அணியினரும் எப்பொழுதும் தீவிரமான பயிற்சியை மேற்கொள்கிறோம். பயிற்சியும், முயற்சியும் அதிகரித்திருப்பதால், அதிரடியான அணியாகவும், பயிற்சியாளராகவும் தெரிகிறது போலும்.

ஐ.எஸ்.எல். போட்டியில் கிடைத்த மறக்க முடியாத அனுபவத்தை பற்றி கூறுங்கள்?

கடந்த சீசனில் நாங்கள் 168 நாட்கள் ஒன்றாக விளையாடினோம். எங்களை பற்றிய தெளிவான புரிதல் இருந்ததால், ஒரே அணியாக செயல்பட்டு, வெற்றியை ருசிக்க முடிந்தது. சிங்கத்தை, அதன் குகையிலேயே நேருக்கு நேர் சந்தித்ததை போன்று, பெங்களூருவில் நடந்த இறுதி போட்டியில், பெங்களூரு அணியை வீழ்த்தி கோப்பையை வென்றோம். இதுதான் மறக்கமுடியாத நிகழ்வு என்று என்னால் உறுதியாக கூற இயலவில்லை. ஆனால் என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வாக இது என்றென்றும் இருக்கும்.

சென்னையின் அணியின் ‘டாப்பர்’ யார்? ‘மக்கு பையன்’ யார்?

இங்கு யாரும் முதல் மாணவரும் அல்ல, யாரும் கடைசி மாணவரும் அல்ல. அனைவரும் கடின உழைப்பாளிகள் மற்றும் திறமைசாலிகள். அவர்கள் என் அணியில் இருந்தாலும் அல்லது இல்லை என்றாலும் எல்லாரும் சகஜமாகவும், நகைச் சுவையுடனும் பேசும் தன்மையுள்ளவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல், விளையாடக்கூடியவர்கள்.

‘தடுப்பாட்டம்’ அல்லது ‘தாக்குதல் ஆட்டம்’ இதில் சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் எதில் சிறந்தவர்கள்?

எங்களுடைய அணியினர் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள். அனைவரும் ஆடுகளத்தில் தங்களது திறமையினை நன்கு வெளிகாட்டினார்கள். இந்த சீசனிலும் வெளிக்காட்டுவார்கள்.

உங்களுக்கு பிடித்த இந்திய கால்பந்து வீரர் யார்? ஏன்?

இந்திய கால்பந்து அணியின் சிறப்பே, ஒரே அணியாக செயல் படுவதுதான். இந்நிலையில், என்னால் ஒருவரை மட்டுமே குறிப்பிட்டுவிட முடியாது. என்னை பொருத்தமட்டில், இந்திய கால்பந்து அணியில் விளையாட்டு வீரர்கள் தொடங்கி, வெளியில் அமர்ந்திருக்கும் ‘பென்ச்’ வீரர்கள் வரை அனைவரையுமே பிடித்திருக்கிறது.

வருகின்ற போட்டிகளில் சென்னையின் எப்.சி., எந்த விதமான வியூகங்களை போட்டியில் பயன்படுத்தும்?

எங்களது முதல் இலக்கு கடந்த சீசனில் கிடைத்த ஐ.எஸ்.எல். டைட்டிலை தக்கவைத்துக் கொள்வது. எக்காரணத்தை கொண்டும், சாம்பியன் பட்டத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம். அதற்கு நாங்கள் வகுத்திருக்கும் வியூகம் மிகவும் எளிதானவை. தற்போது ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவதை மட்டுமே இலக்காக வைத்திருக்கிறோம். ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுவது தான் அடுத்த கட்ட போட்டி களுக்கு வழிவகுக்கும்.

உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணியின் நிலை என்ன?

இந்திய கால்பந்து அணியினர், உலக அரங்கில் தனிப்பெரும் அடையாளத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். கடந்த சில வருடங்களில் வியக்கவைக்கும் நிலையை எட்டியிருக்கிறார்கள். பிரபல கால்பந்து அணியின் பயிற்சியாளர்களும், இந்தியாவை தேடி வர ஆரம்பித்துவிட்டனர். இந்திய கால்பந்து அணி வீரர்களின் கடின உழைப்பிற்கு வெகு சில வருடங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

இந்திய கால்பந்து வீரர்கள் உலக அரங்கில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளனரா? அவர்கள் அதை எவ்வாறு பெற்றனர்?

கடந்த சுற்றுடன் இந்த சுற்றினை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் சிறப்பான அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றனர். தலை குனிந்து இருந்த இந்திய அணி தங்கள் நிலை உணர்ந்து முயற்சி செய்ததால் இந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றது.

ஐ.எஸ்.எல்.போட்டி நடைபெற்ற காலத்தில் இந்தியாவின் பல நகரங்களுக்கு சென்றிருப்பீர்கள்? அதில் உங்களுக்கு பிடித்த இடம் எது? ஏன்?

எனக்கு இந்தியா புதிது. இந்தியாவில் நடைபெறும் ஐ.எஸ்.எல். போட்டிகளும் புதிது. அதனால் இந்தியாவின் பிரபல நகரங்கள், எனக்கு புதுமையான நகரங்களாகவே தெரிந்தன. எந்த நகரத்திற்கு சென்றாலும், இந்தியாவின் கலை-கலாசாரத்தை ரசிக்க முடிந்தது. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு நகரத்திற்கும் ஓர் அழகு உண்டு, அது இந்திய நகரம் அத்தனையிலும் இருக்கின்றது.

இந்திய உணவு வகைகளை ருசித்திருக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்த உணவு எது?

இந்திய பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மிகப்பெரிய ரசிகன் நான். ஏனெனில் இந்தியர்களின் பாரம்பரியம், உணவு வகைகளிலும் வெளிப்படுகிறது. அதை உண்டு உணர்வதற்காக நான் வெகுகாலம் காத்திருந்தேன். அந்த வாய்ப்பை, ஐ.எஸ்.எல்.போட்டிகள் நிறைவேற்றி உள்ளன. கடந்த சீசனில், பல நகரங்களுக்கு பறந்தபோது, பல உணவுகளை ரசித்திருந்தேன். ஆனால் அதன் பெயர்களை மறந்துவிட்டேன். இந்த வருடம் நிச்சயம் உணவு வகைகளின் பெயர், தன்மை, கலாசார பெருமைகளுடன் ருசி பார்க்கிறேன். அப்போதுதான் அடுத்த வருடம் எனக்கு பிடித்தமான உணவுகளை பட்டியலிடமுடியும்.

தமிழ் ரசிகர்களின் ஆதரவை பற்றி சொல்லுங்கள்?

தமிழ்நாட்டு மக்கள் மிகச் சிறந்த முறையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். ஆடுகளத்திலும், பயிற்சியின் போதும், சமூக வலைத்தளங்களிலும், அது போல எல்லா இடங்களிலும் அவர்களின் ஆதரவும், அன்பும் கிடைத்தது. அவர்கள் அளித்த உத்வேகமே கடந்த சீசனிலும், நடப்பு சீசனிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட உதவியது.

மைதானத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததா? ரசிகர்களின் கொண்டாட்டத்தில் திக்குமுக்காடி போன அனுபவங்கள் உண்டா?

சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகளே இல்லை. மைதானத்தில் என்மீதும், அணியினர் மீதும் அவர்கள் காட்டிய அன்பு அளவற்றது. சென்னை அணியின் சார்பாக, ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய ரசிகர்கள் நாங்கள் விளையாடுவதை காண்பதற்கு வெகுதூரம் பயணித்து வருகிறார்கள். நாங்கள் வெற்றி பெறுவதற்கு இவர்களும் ஒரு காரணம்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை உடுத்தி பார்த்ததுண்டா?

அணிந்திருக்கிறேன். கடந்த சீசனில் சென்னை அணிக்காக ஒப்பந்தமானதும், வேஷ்டி சட்டையில் போட்டோ ஷூட் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போதுதான் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதை அணிந்து கொள்வது எனக்கு மிகவும் வசதியாகவும், எளிதாகவும் இருந்தது. தற்போது வெல்க்ரோ முறையிலான வேஷ்டிகளும் கிடைக்கின்றன. அதனால் அடிக்கடி வேஷ்டி கட்டி மகிழ்கிறேன்.

தமிழ் மொழியினை கற்றுக்கொள்ள முயன்றுள்ளீர்களா? தமிழ்நாட்டு பையன் தனபால் கணேஷ் உங்களுக்கு தமிழில் ஏதாவது கற்றுக் கொடுத்துள்ளாரா?

தமிழ் வார்த்தைகள் நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் பல கலந்துரையாடல்களில் தடுமாற்றங்களோடு சில இடங்களில் தமிழ் வார்த்தைகளை தேடுவேன். கண்டிப்பாக ‘வணக்கம்’, ‘நன்றி’ போன்ற வார்த்தைகளை சரியான இடங்களில் கூறிவிடுவேன் என்பவர், அடுத்த சீசனுக்குள் நன்றாக தமிழ் பேசுவேன் என்ற நம்பிக்கையோடு விடைபெற்றார்.