ரூ.10 கோடியில் டேபிள் டென்னிஸ் அகாதெமி
balakrishna-redi

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடியில் டேபிள் டென்னிஸ் அகாதெமி தொடங்கப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கூறினார்.
சட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வெளியிட்ட அறிவிப்புகள்:
சர்வதேச அளவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பதக்கங்கள் பெறுகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு டேபிள் டென்னிஸ் அகாதெமி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடியில் தொடங்கப்படும்.
ரூ.15 கோடியில் விடுதி வசதிகள்: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆராய்ச்சிப் படிப்பில் பயிலும் மாணவர்கள், விடுதியில் தங்கிப் படிப்பது அத்தியாவசியமாக உள்ளது. இதற்கு தற்போதுள்ள விடுதி வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விடுதி வசதிகள் ரூ.15 கோடி செலவில் அமைக்கப்படும்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 1.60 கோடியில் பாரம்பரிய விளையாட்டுகளான களரிபயட்டு மற்றும் சிலம்பாட்டத்துக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்.
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செயல்பாடுகளை அனைத்துப் பிரிவினரும் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் ரூ.33 லட்சம் செலவில் மென்பொருள் உருவாக்கப்படும். அமராவதி நகரிலுள்ள சைனிக் பள்ளியின் தேசிய மாணவர் படை பயிற்சி உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக ரூ.3 லட்சம் செலவில் .22 துப்பாக்கி சுடுதல் பாவிப்பு கொள்முதல் செய்யப்படும் என்றார்