தாய்லாந்து வாலிபால் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக இலக்கியா தேர்வு


12-வது ஆசிய பெண்கள் வாலிபால் போட்டி மற்றும் பிரின்சஸ் கோப்பைக்கான 20-வது தென்கிழக்கு ஆசிய பெண்கள் வாலிபால் சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டு போட்டிகள் கடந்த மாதம் தாய்லாந்தில் நடைபெற்றது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட 17 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியான முத்து இலக்கியா இடம் பெற்றிருந்தார்.

இந்த இரு வாலிபால் தொடர்களில் இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், கொரியா, நியூசிலாந்து, சிங்கப்பூர். மலேசியா உட்பட 12 நாடுகள் கலந்து கொண்டன. இதில் 20-வது தென்கிழக்கு ஆசிய பெண்கள் வாலிபால் தொடரில் இந்திய அணி இரண்டாவது இடமும், 12-வது ஆசிய பெண்கள் வாலிபால் போட்டியில் 8-வது இடமும் பெற்றது.

இந்த இரு போட்டிகளிலும் சிறந்த வீராங்கனை விருதை முத்து இலக்கியா கைப்பற்றினார். சர்வதேச போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் மற்றும் சிறந்த வீராங்கனை கோப்பையுடன் ஓசூர் திரும்பிய மாணவி முத்து இலக்கியாவை பள்ளி தலைமை ஆசிரியர் ஹெலன்மேரி, வாலிபால் பயிற்சியாளர் லியோ மற்றும் தாய் சுதா, ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.