சாதிக்க வயது முக்கியமல்ல, உடற்தகுதி தான் முக்கியம் வெற்றி குறித்து டோனி கருத்து


மும்பையில் நடந்த ஐபிஎல்., தொடரின் ஃபைனலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது. இந்த 11-வது ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தக்க வைத்துக் கொண்ட வீரர்களுடன் ஏலத்திலும் பல வீரர்களை எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான வீரர்கள் 30 வயதைத் தாண்டியவர்கள். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, சென்னை சீனியர் கிங்ஸ் என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி குறித்து சென்னை கேப்டன் டோனி கூறுகையில்,‘சென்னை அணி வீரர்களின் வயது குறித்து பலரும் விமர்சித்தனர். ஆனால், சாதிக்க வயது முக்கியமல்ல, உடற்தகுதி தான் முக்கியம் என்பதை தற்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். ’ என்றார்.