ஆசிய தங்க மங்கை ஸ்வப்னா பர்மனுக்கு சிறப்பு அடிடாஸ் காலணிகள்
SWAPNA


ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மனுக்கு காலில் உள்ள பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு காலணிகள் அடிடாஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வப்னா பர்மன் ஜகார்த்தாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கடினமான ஹெப்டதலான் பிரிவில் தங்கம் வென்றார். அவருக்கு இரு கால்களிலும் 6 விரல்கள் உள்ளதால் பயிற்சி பெறுவது, போட்டிகளில் பங்கேற்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. மேலும் உரிய காலணியும் அவருக்கு கிடைக்காததால் பாதிக்கப்பட்டார். ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற பின் தனக்கு சிறப்பு காலணிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஸ்வப்னா வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு, மத்திய விளையாட்டு அமைச்சர் ரத்தோர் உத்தரவிட்டார். 
இந்நிலையில் சாய் இயக்குநர் நீலம் கபூர் கூறியதாவது: 
மத்திய அமைச்சரின் உத்தரவின்படி ஸ்வப்னாவுக்கு சிறப்பு காலணிகளை பெற்றுத் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடிடாஸ் நிறுவனத்துடன் பேசியுள்ளோம். கொல்கத்தாவில் உள்ள ஸ்வப்னாவின் பயிற்சியாளர் சுபாஷிடம், இதுதொடர்பான விவரங்களை கேட்டுள்ளோம் என்றார்.
கடந்த 2012 முதல் கொல்கத்தாவில் உள்ள சாய் சிறப்பு பயிற்சி மையத்தில் ஸ்வப்னா பயிற்சி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது