கூடைப்பந்து - சென்னை 2வது அணி வெற்றி


ஈரோட்டில் நடந்த, 16 வயதிற்குட்பட்ட சிறுமியர் மாநில கூடைப்பந்து போட்டியில், சென்னை அணி, முதலிடத்தை பிடித்தது.

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான மாநில சிறுமியர் கூடைப்பந்து போட்டி, ஈரோடு, திண்டல் பகுதியில், ஆக., 2ல் துவங்கி, நேற்று முன்தினம் முடிவடைந்தது.

சென்னையைச் சேர்ந்த இரு அணி உட்பட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 25 சிறுமியர் அணிகள், போட்டியில் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், சென்னையின் இரு அணிகள் மோதிக்கொண்டன.

அதில், 70 - 48 புள்ளிக்கணக்கில், சென்னை இரண்டாவது அணி, முதலிடத்தை பிடித்தது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில், கோவை மாவட்டம், 70 - 44 புள்ளிக் கணக்கில், துாத்துக்குடியை வீழ்த்தியது.