பாரா ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை!சத்தியமங்கலம் அடுத்த நாகரணை கிராமத்தில் வசிக்கும் விவசாயி சண்முகத்தின் மகள் ரம்யா. இவர் 1993 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பிறந்தார். இடது கை விரல் குறைபாடு உள்ள இவர், ஆரம்ப கல்வி பயிலும் போது காரத்தே கற்றுக்கொண்டார்.

இதன் பின்னர், 7வது படிக்கும் போது இவரது ஆர்வத்தை பார்த்த ஆசிரியர்கள் இவருக்கு பாரா விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் ஏற்பாடுகளை செய்தனர். 

குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் என அனைத்து பிரிவுகளிலும் இவர் பங்கேற்று தேசிய மற்றும் மாநிலங்கள் அளவிளான போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.குறிப்பாக, 2009 ஆம் ஆண்டில் பெங்களூரில் உலக நாடுகள் பங்கேற்ற ஐவாஸ் போட்டியில் தட்டு எறிதல் போட்டியில் கலந்துக்கொண்டார். பின் 2010 இல் லண்டன் நகரில் நடந்த சர்வதேச அளவிளான தட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

தற்போது,  ஜகர்தா நகரில் 3வது பாரா ஆசிய போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இதில், நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இவர் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.

இதனால், இவரது பெற்றோர்கள் மற்றும் இவரது கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். வெள்ளிப்பதக்கம் வென்ற ரம்யாவிற்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.