திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க ஆண்டு விழா


திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க ஆண்டு விழா தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி, டிவிஷன் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:

கிரிக்கெட்டில் நல்ல முறையில் பயிற்சி பெற்றால், டிஎன்பிஎல் போட்டி மட்டுமின்றி ரஞ்சி கோப்பையில் விளையாடும் வாய்ப்பைக்கூட பெறலாம். உங்களின் திறமையைக் காட்டி, அதிலும் சிறந்து விளங்கினால் இந்திய அணிக்குக் கூட தேர்ந்தெடுக்கப்படலாம். ஒரே நாளில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. வெற்றியைத் தொட தொடர்ந்து கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டும். கடின உழைப்பை மேற்கொண்டால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அலுவலர் கே.எஸ்.விசுவநாதன் பேசும்போது, ‘‘தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் போட்டி, தற்போது சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் மையப் பகுதியான திருச்சியில், பிரீமியர் கிரிக்கெட் போட்டியை நடத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மைதானத்தை தயார் செய்து தந்தால், இங்கும் போட்டிகளை நடத்த தயாராக உள்ளோம்’’ என்றார்.

விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவிச் செயலாளர் எஸ்.மார்ட்டின்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.