கடலூர் ரூ.1 கோடியே 69 லட்சத்தில் விளையாட்டு மேம்பாட்டு பயிலரங்கம், திறந்தவெளி அரங்கம்


கடலூர் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் சமூக பொறுப்புணர்வு பிரிவின் மூலம் ரூ.1 கோடியே 69 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் விளையாட்டு மேம்பாட்டு பயிலரங்கம், திறந்தவெளி அரங்கம் ஆகியவை கட்டப்பட்டு, தூணுடனான எல்.இ.டி விளக்குகள், தளம் பாவுதல் மற்றும் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இந்த கட்டடங்களை திறந்து வைத்து, நடைபாதையில் அமைக்கப்பட்ட தூணுடனான எல்.இ.டி விளக்குகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அன்புச்செல்வன், இயக்குநர் (மனிதவளம்) ஆர்.விக்ரமன், சமூக பொறுப்புணர்வு பிரிவு முதன்மை பொது மேலாளர் ஆர்.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:–

என்.எல்.சி. நிறுவனம் பல்வேறு விதத்தில் உதவிகள் செய்து வருகிறது. அதிகளவில் நபர்கள் அமர்ந்து பாக்கக்கூடிய விதத்தில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம் விளையாட்டு வீரர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு தாங்கள் விளையாட்டில் சிறந்து விளங்கவேண்டும். இந்த கட்டிடத்தை பாதுகாப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு சமூக பொறுப்புணர்வு பிரிவு பணியினை செய்து வருகிறது. அவர்களுக்கு மீண்டும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா விளையாட்டரங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு பயிலரங்கம் மற்றும் திறந்தவெளி அரங்கத்தினால் இங்கு பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு யோகா, டேக்வாண்டோ, சதுரங்கம், கேரம், மேஜை டென்னிஸ், மல்யுத்தம், ஜுடோ மற்றும் புத்தாக்க பயிற்சியினை பெற்று பயனடையலாம்.

இவ்விளையாட்டரங்கில் ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை சுற்றிலும் எல்.இ.டி விளக்கு அமைக்கப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளதால் நடைபயிற்சி செய்கின்ற முதியவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் ஆகியோர் அதிகாலை நேரத்திலும், இரவு 9 மணி வரையிலும் பாதுகாப்புடன் நடைபயிற்சி பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் சார் ஆட்சியர் சரயூ, என்.எல்.சி இந்தியா நிறுவன சமூக பொறுப்புணர்வு பிரினைச் சேர்ந்த பொதுமேலாளர் மணிகண்டன் மற்றும் லெனின், சோமசுந்தரம், ஏழுமலை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் புகழேந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா மற்றும் பயிற்றுநர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.