Monday 18th of February 2019


Monday 18th of February 2019
பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளுநர் அவரது ராஜினாமாவை ஏற்றார். அவர் வகித்து வந்த விளையாட்டுத் துறை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ண ரெட்டி. ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தார். 1998-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடை செய்யக்கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பேருந்துகள் மீது கல்லெறியப்பட்டது. பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதிப்பதாகவும் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் தான் மேல்முறையீடு செய்ய உள்ளதாக பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரது தண்டனையை ஒரு மாதகாலம் நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீனும் வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் சிறைக்குச் செல்வதிலிருந்து அமைச்சர் தப்பித்தாலும் அவர் பதவி பறிபோகாது என சிலரும், தண்டனைதான் நிறுத்திவைப்பு குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அமைச்சர் பதவி, எம்எல்ஏ பதவி இரண்டும் பறிபோகும் என சிலரும் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தண்டனை வேறு குற்றவாளி என அறிவிக்கப்பட்டது வேறு. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8(3)-ன் கீழ் தகுதியிழக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தலைமைச் செயலருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் பாலகிருஷ்ண ரெட்டி அளித்தார்.
முதல்வர் மூலம் இந்தக் கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமாவை ஏற்றார். இதனால் அவர் வகித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் பொறுப்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழக்கப்பட்டது. இதனை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.