நீச்சல்: எஸ்.டி.ஏ.டி., டால்பின் அணி, ஒட்டு மொத்த சாம்பியன்


மாநில அளவிலான நீச்சல் போட்டியில், எஸ்.டி.ஏ.டி., டால்பின் அணி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில், மாநில அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் தேர்வு போட்டி, வேளச்சேரி, நீச்சல் வளாகத்தில், 7ம் தேதி துவங்கியது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 18 வயதிற்கு உட்பட்ட, 650க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில், 'ப்ரீஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பிரெஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர் பிளை ஸ்ட்ரோக்' மற்றும் தனி நபர் மேட்லி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், குரூப் - 1 சிறுவர் பிரிவில், ஆல்பிரட் ராஜன்; சிறுமியரில், வர்ஷா; குரூப் - 2 சிறுவரில், கிருஷ்ண பிரணவ்; சிறுமியரில், ஸ்ரீநிதி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.குரூப் - 3 சிறுவர் பிரிவில், நிதிக்; சிறுமியரில் அக்ஷிதா; குரூப் - 4 சிறுவர் பிரிவில், சாய் ஆதித்யா; சிறுமியரில், ரோஷினி; குரூப் - 5 சிறுவர் பிரிவில், நிதீஷ்; சிறுமியரில் பிரமிதி ஆகியோர், தனி நபர் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.மேலும், முகப்பேரைச் சேர்ந்த, எஸ்.டி.ஏ.டி., டால்பின் அணி, 573 புள்ளிகள் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்த விழாவில், ரயில்வே பாதுகாப்பு ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு பங்கேற்று, வெற்றி பெற்ற வர்களை பாராட்டினார். நீச்சல் சங்க தலைவர் சடையவேல் கைலாசம் மற்றும் துணைத்தலைவர் முனியாண்டி ஆகியோர், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.