ஜெயலலிதா பெயரில் சர்வதேச சதுரங்கப் போட்டி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


 

 

chess

சதுரங்கப் போட்டிகளை சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். 


பள்ளி மாணவர்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் ரூ.29 கோடி செலவில் சர்வதேச சதுரங்கப் போட்டியை தமிழகத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். 
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான குடியரசு தின, பாரதியார் தின சதுரங்கப் போட்டிகள் தொடக்க விழா சென்னை சாந்தோம் சாலையில் உள்ள செயின்ட் பீட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 11 வயது முதல் 19 வயது வரையிலான 360 மாணவர்கள் கலந்து கொண்டனர். 
அமைச்சர் செங்கோட்டையன் சதுரங்கப் போட்டியைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியது:
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தகுதி அடிப்படையில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடாக அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
விரைவில் விளையாட்டு விதிமுறைகள் கையேடு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உபகரணங்கள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் இல்லை. உடற்கல்வி பாடவேளையில் தற்போது மாணவர்களுக்கு பயிற்சிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. 
அத்துடன் விளையாட்டு விதிமுறைகள், பாடங்கள் அடங்கிய சிறிய கையேடு மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். 
கிராம, நகர்ப் புறங்களில் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்களின் உறுதுணையோடு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 
அறிவுத்திறன் மேம்பட...: சதுரங்கப் போட்டியில் பங்கேற்பதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும். பள்ளி மாணவர்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் ரூ.29 கோடி செலவில் சர்வதேச சதுரங்கப் போட்டியை பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது என்றார். 
சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆர்.நடராஜ், விருகை வி.என்.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர், மத்திய அரசின் சமக்கிர சிக்ஷா திட்டத்தின் மாநில இயக்குநர் இரா.சுடலைக் கண்ணன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் அ.கருப்பசாமி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

'பள்ளி மாணவர்களுக்காக, உலக அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்த, பள்ளி கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 
சென்னை, சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில், மாநில அளவிலான சதுரங்கப் போட்டியை துவக்கி வைத்து, அவர் கூறியதாவது:ஜெ., பெயரில், 29 கோடி ரூபாய் செலவில், உலகளவிலான சதுரங்கப் போட்டியை நடத்த, பள்ளி கல்வித்துறை முயற்சி மேற்கொண்டு உள்ளது. பள்ளி பாடத்திட்டத்துடன், விளையாட்டும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில் உள்ள இட வசதிக்கேற்ப, தேவையான விளையாட்டு அரங்கங்கள் அமைக்க, பள்ளிக்கல்வித்துறை முயற்சித்து வருகிறது.இவ்வாறு, செங்கோட்டை யன் கூறினார்.

‘‘அரசுப் பள்ளி மாணவர்கள் உலக அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கேற்க அரசு ஏற்பாடு செய்யும்,’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான சதுரங்க போட்டிகளை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறும் இந்த மாநில அளவிலான செஸ் போட்டி இன்று மாலையே முடிகிறது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்கின்றனர். 

இதுபோன்ற போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலும், உலக அளவிலும் நடைபெறும் செஸ் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.  முதல்வரிடம் அனுமதி பெற்று விரைவில் அதற்கான அனுமதியும், உத்தரவும் வெளியிடப்படும். இது போன்ற போட்டிகள் மாணவர்களின் அறிவை கூர்மையாக்கும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் 2 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.