முதல்வர் விருதுபெற விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு


 

 

முதல்வரின் மாநில அளவிலான விளையாட்டு விருது பெற தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  
இதுகுறித்து மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலரால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 
ஆண்டுதோறும் பன்னாட்டு, தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் தலா 2 ஆண், பெண் விளையாட்டு வீரர்கள், சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம் வீதம், ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கப்பதக்கம், பாராட்டுப் பத்திரம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் தலா ஒரு நடத்துநர், நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம், நன்கொடையாளர், ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோருக்கு முதலமைச்சர் விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. மேற்கண்ட விருது ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.  
விருது வழங்குவதற்கு முந்தைய 2 ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பெண்கள், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் தனிநபர் போட்டியில் முதல் 3 இடங்களிலும், குழுப் போட்டிகளில் முதல் மற்றும் 2 ஆம் இடம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் மற்றும் விரிவான விதிமுறைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n தெரிந்து கொள்ளலாம்.