முதல்வர் விருதுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்


 

 

முதல்வர் விருதுக்கு விழுப்புரம் மாவட்டத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரம் மாவட்ட பிரிவு மூலமாக ஆண்டு தோறும் பன்னாட்டு அளவிலும் தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண், 2 பெண் விளையாட்டு வீரர்களுக்கு, 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. 
இந்த விருக்கு பரிசாக தலா ரூ.ஒரு லட்சமும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கமும், பாராட்டுப் பத்திரமும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்படும்.
இதுதவிர விளையாட்டு போட்டிகளை நடத்தும் நடத்துநர், நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் நன்கொடையாளர், ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகிய பிரிவுகளில் தலா ஒருவருக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படும். 
இந்த விருது பெறுவோருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். 
விருதுக்கான தகுதியாக முந்தைய இரு ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பெண்களுக்கும், பட்டியல் இனத்தவருக்கும், பழங்குடியினருக்கும் முன்னுரிமை வழங்கப்படும். கடந்த 2013-14, 2014-15, 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆகிய ஐந்து நிதியாண்டுக்கான (ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் 31 மார்ச் வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைச்சிறந்த விளையாட்டு வீரர்கள், பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கமும், அதாவது உலகக்கோப்பை, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டுப்போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு இணையங்களால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருக்க வேண்டும். ஒரு விருதுக்கு மூன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை அதே ஆண்டுக்கு அனுப்பக் கூடாது.
இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703485 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்துக்கு அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்" என்று எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.