முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி இந்த ஆண்டு நடத்தப்படும் -அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி


இந்த ஆண்டு முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தமிழ்செல்வன் கேள்வி ஒன்றை எழுப்பினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்றார்.

அதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பதில் அளித்து கூறியதாவது:–

பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை. ஆனாலும் மேற்படி அந்த இடத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் ஆய்வு செய்து தேவை இருக்கும் பட்சத்தில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அப்போது தி.மு.க. கொறடா சக்கரபாணி துணை கேள்வி ஒன்றை எழுப்பினார்.

ஆண்டுதோறும் முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். கபாடி நமது பாரம்பரிய விளையாட்டு ஆகும். அந்த போட்டிகளை ஆண்டுதோறும் இடைவிடாமல் நடத்த வேண்டும். இந்த ஆண்டு முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி நடத்தப்படுமா? என்றார்.

அதற்கு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பதில் அளிக்கையில், இந்த வருடமும் முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி நடத்தப்படும். இதுபோன்ற திட்டம் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கபாடி போட்டி நடத்தப்படும். இந்திய அளவில் விளையாட்டில் தமிழகம் 8வது இடத்தில் இருந்தது. தற்போது அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக இந்திய அளவில் விளையாட்டில் தமிழகம் 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது என்று கூறினார்.